ஜல்லிக்கட்டு... காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்த அறிவுறுத்தல்
ஜல்லிக்கட்டில் வீரர்கள் காயமடையாமல் இருக்க காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் பொருத்த அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். இதற்கு மாடுபிடி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை,
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். மாடுபிடி வீரர்களும் இதில் ஆர்வமாக பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர். காளைகளை அதன் உரிமையாளர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தி தயார்படுத்துவது உண்டு. இந்த ஜல்லிக்கட்டினை நடத்தவும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதம் என தற்போது வரை கோவில் திருவிழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளுக்காவும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதனை இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வு குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகளும் விதிமுறைகளின்படி போட்டி நடைபெறுவதை கண்காணிக்கின்றனர்.
இந்த நிலையில் காளைகளை அடக்கும் போது அதன் கொம்புகள் மாடுபிடி வீரர்களை குத்தும் போது காயம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் பலத்த காயமானால் உயிரிழப்பும் ஏற்படுவது உண்டு. இந்த நிலையில் வீரர்கள் காயமடையாமல் இருக்க காளைகளின் கொம்புகள் மீது ரப்பர் குப்பிகள் பொருத்த கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்ற 2 இடங்களில் சில காளைகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தி அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தொடர்ந்து அடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாடுபிடி வீரர்கள் ஒருபுறம் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், காளையை மேலும் துன்புறுத்தும் விதமாக இந்த குப்பிகள் அமைந்துவிடக்கூடாது என காளைகளின் உரிமையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story