ஆலங்குடி அருகே மண்ணில் புதைந்திருந்த பழமையான அணிகலன்கள் கண்டெடுப்பு
ஆலங்குடி அருகே மண்ணில் புதைந்திருந்த பழமையான அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சியில் உள்ள காட்டுபட்டியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் வரத்து வாரியை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பணியில் இருந்த போது அங்கே மண்ணில் புதைந்திருந்த தங்கம் போன்றதில் பழமையான 10 மாங்கல்யம் மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குண்டு மணிகள் கோர்க்கப்பட்ட சுமார் 80 கிராம் எடையிலான உலோக ஆபரணத்தை கண்டெடுத்தனர். இது தங்கத்திலான ஆபரணம் என அந்த பெண்கள் நினைத்து இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மலர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அங்கு கிடைத்த அந்த அணிகலனை நேற்று அந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நிர்வாகத்தினர் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட அவர் அந்த மாங்கல்யம் மற்றும் குண்டுமணி போன்ற ஆபரண அணிகலனை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காப்பாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அங்கு இதற்கென உள்ள ஆய்வாளர்கள் இது தங்கத்திலான அணிகலனா அல்லது செம்பு அல்லது வேறு உலோகத்திலான அணிகலனா? என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள் என்று தாசில்தார் செந்தில்நாயகி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story