பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 23 March 2022 2:31 AM IST (Updated: 23 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

சென்னை,

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர். அதன் விவரங்கள் வருமாறு:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க.அரசின் இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்தநேரிடும் என எச்சரிக்கிறேன்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- விலைவாசி உயர்ந்துவரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, அதன் விலையை மேலும் உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.965.50ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்துவரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்கமுடியாது.

பெட்ரோல், டீசல் விலைகளும் 137 நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு முறையே 76 காசு இன்று உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

இதேபோல் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story