காதலன் இறந்த சோகத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை...!
காதலன் இறந்த சோகத்தில் 10-ம் வகுப்பு மாணவி குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரித்த போது, வயிற்று வலியால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:- தற்கொலை செய்து கொண்ட 10-ம் வகுப்பு மாணவியும், அத்திப்பலகானூரை சேர்ந்த சூர்யா (வயது 21) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். அந்த வாலிபர் நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
காதலன் உயிரிழந்ததை அறிந்த 10-ம் வகுப்பு மாணவி மிகுந்த வேதனை அடைந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் கூட செல்ல மனம் இல்லாமல் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் கேட்ட போது, உடல்நிலை சரியில்லை அதனால் பள்ளிக்கூடம் போகவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
காதலன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அந்த மாணவி, நேற்று முன்தினம் மாலையில் அவரது வீட்டில் உள்ள குளியலறையில் துணி காயப்போடுவதற்கு பயன்படுத்தும் சிறிய கம்பி மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மாணவி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த சோகத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story