தீரன் படப்பாணியில் சைபர் திருடர்களை தூக்கிய தமிழக போலீசார்..!


தீரன் படப்பாணியில் சைபர் திருடர்களை தூக்கிய தமிழக போலீசார்..!
x
தினத்தந்தி 23 March 2022 10:40 AM IST (Updated: 23 March 2022 10:40 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

அரியலூர் அருகே செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக கூறி 23 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர். 

செல்போன் டவர்

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு செல்போன் டவர் அமைக்க முன்பணம் 40 லட்சம் மற்றும் மாத வாடகை 40 ஆயிரம் தருவதாக வந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பி இவர் கடந்த 2018 முதல் இரண்டு ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக 23 லட்சத்து 98 ஆயிரத்து 900 கொடுத்து ஏமாந்து விட்டதாக கடந்த 14.05.2021 அன்று அரியலூர் சைபர் கிரைம் போலீசாரிடம்‌ புகார்‌கொடுத்தார். 

புகாரின் பேரில் விசாரித்த போலீசார் அந்த வங்கிகணக்கில் இருந்த 9 லட்சத்தை முடக்கினர். இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியில் இருந்து செயல்படுவதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் டெல்லி சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் நாமக்கல்லைச் சேர்ந்த மருதுபாண்டியன், கமுதியைச் சேர்ந்த ராஜேஷ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருகேசன், ராஜ்கிஷன் என்பவர்கள் என்று தெரிய வந்தது. 

தனிப்படை

மோசடியில் ஈடுபட்டவர்களை கண்காணித்து கைது செய்ய சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் ஜாகிர் உசேன், சுரேஷ்பாபு, அரவிந்த்சாமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இருந்து தொடர்ந்து அவர்களின் தொடர்புகளை கண்காணித்தனர். வங்கி கணக்கு மூலம் மருதுபாண்டியன் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் தனிப்படை போலீசார் கடந்த மாதம் டெல்லி சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு தீரன் அதிகாரம் ஒன்று சினிமா படப்பாணியில் பல்வேறு இடையூறு வந்தது. மொழி தெரியாமலும் உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு கிடைக்காமலும் சிரமப்பட்டனர். 

குற்றவாளிகள் கைது

இந்த நிலையில் அங்கேயே முகாமிட்டு முதலில் எம்.எஸ்.சி. பட்டதாரி மருதுபாண்டியனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவனது கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 லேப்டாப், 42 செல்போன்கள், 18 சிம்கார்டு, 7 வங்கி கணக்கு புத்தகம், 19 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஒரு லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும், 15 ஆண்டுகளாக அவர்கள் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். 

மேலும் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்தால் இவ்வளவு பணம்,  சிம் வாங்கினால் இவ்வளவு பணம் என அனைத்தையும் இறந்தவர்கள் பெயரில் வாங்கி செயல்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் கைது செய்து தமிழகம் கொண்டு வந்தனர். பின் அவர்களை நல்லிரவில் அரியலூர் குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

காவலில் எடுத்து விசாரணை

மேலும் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். அப்போது அவர்கள் தமிழகம் முழுவதும் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்று தெரியவரும். 

இந்தியாவின் தலைநகரில் இருந்து கொண்டு தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு விவசாயி இடம் இணைய வழியில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த கொள்ளையர்களை அவர்களது பாணியில் பின் தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கைது செய்து அரியலூர் கொண்டு வந்த அரியலூர் மாவட்ட போலீசாரை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

Next Story