சினிமா பாணியில் தங்கம் கடத்தல்...! 40 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை ...! கும்பலுக்கு வலைவீச்சு


சினிமா பாணியில் தங்கம் கடத்தல்...! 40 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை ...! கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 March 2022 11:29 AM IST (Updated: 23 March 2022 11:29 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பாணியில் தங்கம் கடத்த முயன்ற நபர் 40 நாட்களாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பூர், 

துபாயிலிருந்து 1 கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காத வாலிபரை  விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 28). இவர் துபாயில் பெயிண்டிங் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர், கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதியன்று துபாயிலிருந்து ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.

அப்போது அருண் பிரசாத் என்பவர் செல்லப்பனிடம் அறிமுகமாகி ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தால் ரூ.1 லட்சம் கமிஷனாக கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. 

இந்த நிலையில் அந்த தங்க கட்டிகளை செல்லப்பன் தனது ஆசனவாயில் பதுக்கி வைத்து விமானத்தில் கடத்தி வந்த நிலையில், அதில் வலி ஏற்பட்டு ரத்தம் வரவே உடன் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த அனிஷ் குமார் என்பவரிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்து விட்டு செல்லப்பன் சென்னை வந்து இறங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் செல்லப்பனிடம் தங்கத்தை எங்கே என கேட்டு தங்கத்தை பெற்று சென்ற அனிஷ் குமாரை கண்டுபிடிக்க கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று தேடி வந்துள்ளனர்.

இதையடுத்து அனீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள விடுதியில் சுமார் 40 நாட்களாக செல்லப்பனை அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. 

இதில் செல்லப்பன் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், கடத்தல் கும்பல் பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கடத்தல் கும்பலை சேர்ந்த மண்ணடியை சேர்ந்த முகமது இந்தியாஸ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story