கொடைக்கானல் வனப்பகுதியில் கடும் வறட்சி - குடிநீரின்றி தவிக்கும் வன விலங்குகள்
கொடைக்கானல் வனப்பகுதியில் கடும் வறட்சியால் வன விலங்குகள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து வருகின்றன. இதனால் வன விலங்குகளும் தங்கள் இருப்பிடத்தை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது காட்டுத்தீயும் வன விலங்குகளை அச்சுறுத்தி உள்ளன. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாக வனத்துறையினர் இப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நீரை சேமித்து வைப்பது வழக்கம். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் அதிக அளவு குரங்குகளும் உள்ளன. இவை சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடங்களை நோக்கி படையெடுத்து அவர்கள் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகின்றன.
வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக அவை இடம் பெயரும் போது முகத்திலும், உடம்பிலும் காயத்துடன் காணப்படுகின்றன. மேலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சோர்வுடன் உள்ளன. சுற்றுலா பயணிகள் கொடுக்கும் தண்ணீரை ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் காட்சிகளும் பின்னர் அதனை மற்ற குரங்குகளுக்கு வழங்குவதையும் காண முடிகிறது.
அவ்வப்போது நகர் பகுதியில் சாரல் மழை பெய்தாலும் வனப்பகுதி கடும் வறட்சியாலும், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story