நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்காற்ற வேண்டும்


நாட்டின் வளர்ச்சிக்கு  மாணவர்கள் பங்காற்ற வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2022 10:53 PM IST (Updated: 23 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்காற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்காற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
தியாகிகள் தினவிழா
மத்திய கலாசாரத்துறை, புதுவை கலை பண்பாட்டுத்துறை மற்றும் செய்தி விளம்பரத்துறை சார்பில் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரம கலையரங்கத்தில் இன்று தியாகிகள் தின விழா நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் வல்லவன் வரவேற்று பேசினார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனமாக நின்றனர்.
அதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
தூக்குமேடையை விருப்பமாக...
நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளைப்பற்றி இளைஞர்களுக்கு எடுத்து சொல்லும் தினமாக தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 23-ந்தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நாள் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் ஆகும்.
அவர்கள் 3 பேரும், எங்களுடைய உயிர் மெழுகுவர்த்தி போன்று கரைந்தாலும் எங்களது தியாகத்தின் வெளிச்சம் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித்தரும் என்று சொல்லிவிட்டு தூக்குமேடை ஏறினார்கள். பகத்சிங் தூக்கு மேடைக்கு போவதற்கு முன்னால்கூட புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட இளைஞர்கள் வாழ்ந்த நாடு இந்த நாடு.
இந்தியனின் ரத்தம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க போராட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களை கூட்டி வந்தார்.
இந்திய நாட்டின் எல்லை பகுதிக்கு வந்தபோது, நாட்டின் எல்லைக்குள் நுழையும் 10 பேர் இந்தியர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் எல்லைக்குள் நுழைபவரை ஆங்கிலேயர்கள் சுடுவார்கள். அப்போது இந்த மண்ணில் இந்தியனின் ரத்தம்தான் முதலில் சிந்தவேண்டும் என்றார். அப்படி ரத்தம் சிந்தி வாங்கியதுதான் சுதந்திரம்.
நாட்டின் வளர்ச்சிக்காக...
எனவே மாணவர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், சுதந்திர போராட்ட வீரர்களைப்பற்றி தேடித்தேடி படியுங்கள். ஒவ்வொருவரின் தியாகத்தைப்பற்றி கேட்கும்போது ரத்தம் சூடேறும். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நாமும் பாடுபட வேண்டும் என்று தோன்றும். 
ஆஷ்துரையை சுட்டுக்கொல்ல வாஞ்சிநாதன் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றது இந்த புதுச்சேரி மண்ணில்தான். அப்படிப்பட்ட புரட்சியாளர்கள் பலர் வாழ்ந்த மண் இந்த மண். நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பங்காற்ற வேண்டும். சுதந்திர போராட்டத்துக்காக பெண்களும் தியாகம் செய்துள்ளனர். அவர்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உயிர்த்தியாகம்
மாணவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி இருக்கவேண்டும். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த இளைஞர்களை நாம் இப்போது நினைப்போம். ஒரு காலத்தில் இளைஞர்களாகிய உங்களால் இந்த நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுப்போம். சுதந்திரத்தை மனதில் விதைக்கும் தினமாக அந்த நாள் அமையவேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர் உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை    இயக்குனர் வினயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story