செல்போனை தூக்கிச்சென்று வித்தை காட்டிய குரங்கு


செல்போனை தூக்கிச்சென்று வித்தை காட்டிய குரங்கு
x
தினத்தந்தி 23 March 2022 11:33 PM IST (Updated: 23 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. அதிலும் ஸ்மார்ட் போன் என்பது தொழில்அதிபர் முதல் தொழிலாளர் வரை அனைத்து தரப்பு மக்களின் கைகளிலும் தவழ்ந்து வருகிறது.

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. அதிலும் ஸ்மார்ட் போன் என்பது தொழில்அதிபர் முதல் தொழிலாளர் வரை அனைத்து தரப்பு மக்களின் கைகளிலும் தவழ்ந்து வருகிறது. 
குரங்கு கையில் செல்போன்
இத்தகைய சூழ்நிலையில் இன்று மாலை புதுவை கம்பன் கலையரங்கம் அருகே உள்ள தனியார் கட்டிடம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் சுமார் 60 அடி உயரத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்தன. அதில் ஒரு குரங்கு ஸ்மார்ட் போனை வைத்து பார்த்துக்கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்துவிடவே தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி குரங்கின் செயல்பாடுகளை கவனித்தனர்.
அந்த செல்போன் யாருடையது என்று சிலர் விசாரிக்க தொடங்கினார்கள். அப்போதுதான் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவருடைய செல்போன் என்பது தெரியவந்தது. குரங்கு கையில் தனது செல்போன் இருப்பதை கண்ட அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். பணி செய்யும் துணிமணிகளை கழற்றி அதனுடன் வைத்திருந்த செல்போனை குரங்கு தூக்கி சென்றிருப்பதும் அப்போதுதான் தெரியவந்தது.
போன் செய்தனர்
இதைத்தொடர்ந்து குரங்கிடம் இருந்து செல்போனை கைப்பற்ற தொழிலாளர்கள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டனர். என்னதான் தகிடுதத்தம் செய்தும் குரங்கு செல்போனை விடுவதாக இல்லை.
அங்கிருந்து குரங்கினை விரட்டி பார்த்தனர், அதற்கும் பலன் இல்லை. சிலர் குரங்கு வைத்திருந்த செல்போன் எண்ணுக்கு வாலிபர் ஒருவர் போன் செய்தார். அப்போது செல்போனில் சத்தம் ஏற்படவே குரங்கு சற்று மிரண்டது. இருந்தபோதிலும் செல்போனில் பலவித வண்ணங்கள் தோன்றவே அதை ஆச்சரியத்துடன் திருப்பி திருப்பி பார்த்தது. ஆனால் செல்போனை மட்டும் அது விடுவதாக இல்லை.
பட்டாசு கொளுத்தி...
இதனிடையே கூட்டத்திலிருந்த ஒருநபர் பட்டாசு வாங்கி வந்து கொளுத்தி குரங்கு நோக்கி வீசினார். பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடிக்கவே மிரண்டு போன குரங்கு செல்போனை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. அதனை எடுக்க வாலிபர் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி சென்று எடுத்தார். இருப்பினும் செல்போன் தரையில் விழுந்து நொறுங்கியது. சுமார் ஒருமணிநேர போராட்டத்துக்கு பின்னரும் செல்போனை நொறுங்கிய நிலையிலேயே மீட்ட தொழிலாளி வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார். அதன்பின்னர் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். செல்போனை தூக்கிச்சென்று குரங்கு காட்டிய வித்தையால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story