மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: ‘‘பிளஸ்-2 வகுப்பில் 3 பாடங்கள் நடத்தப்படவில்லை’’ என மாணவா்கள் புகார் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்க கலெக்டரிடம் கோரிக்கை
மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பிளஸ்-2 வகுப்பில் 3 பாடங்கள் நடத்தப்படவில்லை எனவும், அதனால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்கக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை:
பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் கணினி வணிகவியல் பிரிவில் 45 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சீருடையில் இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது நுழைவுவாயில் அருகே கலெக்டர் கவிதாராமு காரில் வந்து கொண்டிருந்தார்.
சீருடையில் மாணவர்கள் செல்வதை கண்ட அவர், காரை நிறுத்தி மாணவர்களிடம் என்னவென்று விசாரித்தார். அப்போது பள்ளியில் தங்கள் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் போதுமானதாக இல்லை, ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்ததாக மாணவர்கள் கூறினர். அவர்களை தனது அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறி சென்று மாணவர்களிடம் மனுவை பெற்றார்.
பாடங்கள் நடத்தப்படவில்லை
மனு அளிக்க வந்த மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய 6 பாடங்கள் உள்ளது. இதில் கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் 3 பாடங்கள் எங்களுக்கு நடத்தப்படவில்லை. வணிகவியல் பாடத்திற்கு மட்டும் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது வந்து பாடம் நடத்துவது உண்டு.
நாங்கள் இந்த 3 பாடங்களையும் முழுமையாக படிக்கவில்லை. திருப்புதல் தேர்வை தொடர்ந்து விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் நாங்கள் பாடங்களை படிக்க வேண்டும். எப்படி நாங்கள் பொதுத்தேர்வு எழுதமுடியும். இதனால் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நாங்கள் இந்த 3 பாடங்களையும் முழுமையாக படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெறுவோமா? என்பது தெரியவில்லை. எனவே எங்களை தேர்ச்சி பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். கலெக்டரிடமும் இதே கருத்தை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்வை எழுத வேண்டும்
அப்போது அதற்கு கலெக்டர், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தேர்வினை கட்டாயம் எழுதி தான் ஆக வேண்டும் எனவும், தேர்வெழுதாமல் தேர்ச்சி பெற வைக்க முடியாது எனக்கூறியுள்ளார். பிளஸ்-2 வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்களை முழுமையாக படிக்கவில்லை என மாணவர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளிப்பதற்கு முன்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் இதே கோரிக்கையை கூறி முறையிட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமியை (வயது 58) பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூா்த்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வுக்கு தயாராக 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கண்ட பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல், கணக்குபதிவியல், தணிக்கையியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்க அனுமதி வாங்கிய போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கூறியும், அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story