அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 24 March 2022 2:15 AM IST (Updated: 24 March 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வுமான கே.சி.பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கிற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உரிமை இல்லை

அதில், “அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை. பிறரை துன்புறுத்தும் நோக்கில் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

கட்சி உறுப்பினராக இல்லாத நபர், கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

சட்ட விரோதம்

இதற்கு மனுதாரர் கே.சி.பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “கட்சியில் இருந்து என்னை நீக்கியபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், என்னை நீக்கியதே சட்டவிரோதம். இந்த வழக்கை தாக்கல் செய்ய எனக்கு அடிப்படை உரிமை உள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story