‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலத்தால் சசிகலா மகிழ்ச்சி


‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலத்தால் சசிகலா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 March 2022 3:37 AM IST (Updated: 24 March 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலத்தால் சசிகலா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை,

சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகமே இல்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:-இது கடவுளுக்கு தெரிந்த உண்மை. தற்போது மக்களுக்கும் இந்த உண்மை தெரிந்துவிட்டது. எது உண்மையோ, அது காலதாமதமாக வரலாமே தவிர, உண்மையை யாராலும் மாற்ற முடியாது. திரையிட்டு மறைக்கவும் முடியாது.

தொண்டர்கள் கருத்து

கேள்வி:- அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களுக்கு அழைப்பு வராதது உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா?

பதில்:- எனக்கு வருத்தமே இல்லை. காரணம், எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தனியாகதான் இருந்தார். பின்னர் அவரது தலைமையில் ஆட்சியை அமைத்தோம். எனவே முதலிலேயே அனுபவம் இருக்கிறதால், இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொண்டர்கள்தான் அ.தி.மு.க.வின் ஆணிவேர். இதை எம்.ஜி.ஆர். கட்சியை ஆரம்பித்த அன்றே கட்சியின் சட்டத்திட்ட விதிகளிலேயே சொல்லி இருக்கிறார். எதோ கட்சியில் பதவியில் உள்ள 100 பேர் ஒரு கருத்தை எடுத்தார்கள் என்றாலும், கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அது தான் இந்த இயக்கத்தில் நடக்கும். அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி:- உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட அபிப்ராயம், மரியாதையும் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- உண்மையை சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விசாரணை நடப்பது நல்லது தான் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தேன்.

அரசியல் பயணம்

கேள்வி:- மக்கள் மத்தியில் உங்கள் மீது இருந்த சந்தேகம்...

பதில்:- மக்கள் சொன்னதாக நான் எடுத்துக்கவில்லை. அரசியலில் என்னை பிடிக்காதவர்கள் இந்த மாதிரி சொல்லி இருக்கலாம் என்றுதான் நான் கருதுகிறேன்.

கேள்வி:- உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கும்?

பதில்:- நீங்கள் எல்லாம் இங்கேதானே இருப்பீர்கள். பார்ப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story