பெட்ரோல்-டீசல் விலை 2-வது நாளாக உயர்வு


பெட்ரோல்-டீசல் விலை 2-வது நாளாக உயர்வு
x
தினத்தந்தி 24 March 2022 5:30 AM IST (Updated: 24 March 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை 2-வது நாளாக நேற்று உயர்ந்திருந்தது. தொடர்ந்து விலை அதிகரிக்கும்பட்சத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னையில் பெட்ரோல் விலை 137 நாட்களுக்கு பிறகும், டீசல் விலை 66 நாட்களுக்கு பிறகும் நேற்று முன்தினம் உயர்ந்திருந்தது. அன்றைய தினம் லிட்டருக்கு தலா 76 காசு வரை அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 16 காசுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுக்கும் விற்பனை ஆனது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயே இருப்பதால், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துதான் காணப்படும் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் கூறியது போல, 2-வது நாளாக நேற்றும் பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம் இருந்தது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 102 ரூபாய் 91 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரையில், லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, 92 ரூபாய் 95 காசுக்கு விற்பனை ஆனது.

அத்தியாவசிய பொருட்கள் விலை

பெட்ரோல்-டீசல் விலை எப்போதெல்லாம் ஏறுமுகம் காணுகிறதோ, அப்போதெல்லாம் சரக்கு வாகனங்களின் கட்டணத்திலும் மாற்றம் இருக்கும். சரக்கு வாகனங்களின் கட்டண உயர்வு, அந்த வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களின் விலையில் சேரும். இதனால் அந்த பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், உணவு தானியங்கள், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் அண்டை மாநிலங்களில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தான் கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், அதன் தாக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலையில் காணப்பட வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களில்...

கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசும் அதிகரித்துள்ளது. இன்றும் (வியாழக்கிழமை) விலை அதிகரித்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாயையும், டீசல் 93 ரூபாயையும் கடந்துவிடும் சூழல் இருக்கிறது.

Next Story