குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெளிச்சத்துக்கு வந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்கார விவகாரம்


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெளிச்சத்துக்கு வந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்கார விவகாரம்
x
தினத்தந்தி 24 March 2022 2:35 PM IST (Updated: 24 March 2022 2:35 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் கொள்ளையடித்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்டதகராறில் வெளிச்சத்துக்கு வந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் விவகாரம்.

வேலூர்,

வேலூர் தனியார் மருத்துவமனை பெண் டாக்டரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பீகாரை சேர்ந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க சென்றார். சினிமா முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 ஆண்கள் இருந்தனர். அப்போது டிரைவர் இது ஷேர்ஆட்டோ தான். வேலூர் செல்லும் வழியில் ஒவ்வொருவராக இறங்கி விடுவார்கள் என்றுகூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றினார். 

ஆட்டோ வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் வந்தபோது மருத்துவமனை செல்லும் பாதையில் சாலை பணிகள் நடப்பதாக கூறி வேறுபாதை வழியாக ஆட்டோ சென்றது. சிறிதுதூரம் சென்ற நிலையில் திடீரென ஆட்டோவில் இருந்த 4 பேரும் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி விரட்டினர். கத்திமுனையில் டாக்டரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், 2 பவுன் செயின், மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து அதில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்தனர்.

இந்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஆன்லைன் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (வயது 20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷ் தவிர மற்ற 4 பேரையும் வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக காணப்பட்ட சந்தோசை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெண் டாக்டரின் செல்போன், 2 பவுன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 17 வயது சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி கலைபொன்னி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் காவலுடன் பார்த்திபன், பரத், மணிகண்டன் ஆகிய 3 பேரும் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சென்னை கெலீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மார்ச் 19 அன்று, வேலூரில் உள்ள சத்துவாச்சாரியில், ஒரு ஏடிஎம் மையத்திற்கு வெளியே, குடிபோதையில் 2பேர் தகராரீ ஈடுபட்டு  உள்ளனர். அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைந் அடத்தினர். ​​தாங்கள் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 40,000 ரூபாயைப் பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. விசாரணையில், மேலும் விசாரணையில், இருவரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததையும், அவரிடமும்  அவரது ஆண் நண்பரிடம்கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது இதை தொடர்ந்தே இந்த சம்பவம்  வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

Next Story