வேலூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்...!


வேலூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 24 March 2022 7:15 PM IST (Updated: 25 March 2022 1:09 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே புதிய பள்ளி கட்டிடத்தைத் திறக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே தேவரிஷிகுப்பம் பகுதியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 

தற்போது 250- க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். 4 ஆண்டுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளிக்கான கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது அந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு, சாலை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. புதிய பள்ளிக் கட்டிடம் செயல்படத் தயார் நிலையில் இருந்தும் இதுவரை திறக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 121 மாணவர்கள் உட்கார இடம் இல்லாமலும், கழிவறை வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக திறக்கக் கோரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதற்கான நவடிக்கையை அதிகரிகள் எடுப்பதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் சைக்கிளை குறுக்கே போட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, "மாற்று மாற்று புதிய பள்ளிக்கட்டிடத்திற்கு மாற்று" என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கிப் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளித்தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, புதிய பள்ளிக் கட்டிடத்தில் குடிநீர்க் குழாய் இணைப்பு உள்ளிட்ட விடுபட்டுள்ள சில பணிகளை முடித்து ஒருவாரத்தில் அதைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு வகுப்புக்குத் திரும்பினர். 


Next Story