டிப்ஸ்’ பங்கிடுவதில் தகராறு: டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை


டிப்ஸ்’ பங்கிடுவதில் தகராறு: டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை
x
தினத்தந்தி 25 March 2022 7:09 AM IST (Updated: 25 March 2022 7:09 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர் வழங்கிய ‘டிப்ஸ்’ பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் பாரில் வாடிக்கையாள வழங்கிய டிப்ஸை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார் ஊழியர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டியே டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முனிராஜ் (வயது 29) மற்றும் அவரது நண்பர் முனிசெல்வம் (24) ஆகிய இருவரும் அங்கேயே தங்கி பார் ஊழியராக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பாரில் மது அருந்த வந்த வாடிக்கையாளர் ஒருவர் மது அருந்திவிட்டு ரூ.100-ஐ டிப்ஸ் ஆக முனிராஜ்க்கு கொடுத்து விட்டு இருவரையும் பிரித்து கொள்ளுமாறு கூறி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ‘டிப்ஸ்’ பணத்தில் முழுவதையும் முனிராஜ் குடித்து விட்டு முனிசெல்வத்திற்கு பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

சரமாரி தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த முனிசெல்வம், போதையில் வந்த முனிராஜை சரமாரியாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து மயங்கினார். இதையடுத்து போதையில் முனிராஜ் விழுந்து விட்டதாக நினைத்து முனிசெல்வம் அங்கிருந்து சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை போதையில் தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து முனிராஜை எழுப்பியபோது, அவர் இறந்து விட்டதை அறிந்து பார் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நண்பர் கைது

தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முனிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்த முனிசெல்வத்தை கைது செய்த போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். 

டாஸ்மாக் மதுக்கடை பாரில் ‘டிப்ஸ்’ பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story