அசோக் நகரில் போலீசை வெட்டிய வழக்கு - மேலும் 2 வாலிபர்கள் கைது
கஞ்சா போதையில் போலீசை தாக்கிய வழக்கில் ஒருவர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம். இவர் தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். உடன் பாதுகாப்புக்காக போலீஸ்காரர் சக்திவேல் சென்றார்.
அப்போது அசோக் பில்லர் அருகே நூறடி சாலையில் சென்றபோது அவ்வழியே மொப்பட்டில் கஞ்சா போதையில் வந்த 3 வாலிபர்கள் செல்வத்தின் காருக்கு குறுக்கே வந்து இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டனர். காரில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல் கீழே இறங்கி வாலிபர்களை விலகி செல்லுமாறு கூறினார்.
அப்போது தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சக்திவேலை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். படுகாயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே முகப்பேரில் நடந்த வாகன சோதனையில் போலீஸ்காரர் சக்திவேலை வெட்டிய கண்ணகி நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவன் போலீசிடம் சிக்கினான். அவன் கொடுத்த தகவலின்படி தலைமறைவான புருஷோத்தமனின் கூட்டாளிகளான திருச்சியை சேர்ந்த மனோஜ், பாடியை சேர்ந்த நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆதம்பாக்கம் ராம்நகர் அருகே பதுங்கி இருந்த மனோஜ், நிஷாந்த் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இதில் மனோஜ், நிஷாந்த் இருவருக்கும் கை எழும்பு முறிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பிடிபட்ட புருஷோத்தமன் கழிவறையில் வழுக்கி விழுந்து கை முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story