தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கிடைக்க பெறவில்லை - மத்திய அரசு


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கிடைக்க பெறவில்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 25 March 2022 4:30 PM IST (Updated: 25 March 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கிடைக்க பெறவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.


சென்னை,



நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டது. நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. கவர்னரால் நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இதனை தமிழக சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி. ராசா எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அளித்த பதிலில், நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை என தெரிவித்து உள்ளார்.

நீர் தேர்வு விலக்கு விவகாரத்தில், தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர்.  இந்த விவகாரத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா கூறினார்.

நீர் தேர்வு விலக்கு பற்றிய சட்ட சிக்கல்களை மத்திய கல்வி, சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆய்வு செய்து முடிவு மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.  எனினும், உள்துறை அமைச்சகத்திற்கு முதலில் இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.  அதன்பின்னரே அதுபற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


Next Story