துபாய் உலக கண்காட்சி: தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


துபாய் உலக கண்காட்சி: தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 March 2022 7:34 PM IST (Updated: 25 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் தமிழக அரங்கை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5- வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவற்றின் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் கண்காட்சி தொடங்கியது முதல் வாரா வாராம் மாநில அரசுகளும் தங்கள் தளங்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில், ‘தமிழ்நாடு தளம்' உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தளத்தில் வருகிற 31-ந் தேதி வரை ‘தமிழ்நாடு வாரம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றுள்ளார். துபாயில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக  ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், இந்திய அரங்கை பார்வையிட்டு தமிழ்நாடு தளத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் கலந்துகொண்டு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். 

தமிழ்நாடு தளத்தில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல் தொடர்பு, மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள உதவும் வகையிலான காட்சிமைப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமயமான காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.

இதில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்திய அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு இந்த தளம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


Next Story