காரைக்கால் விநாயகர் கோவில் முகப்பு மண்டப விவகாரம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை


காரைக்கால் விநாயகர் கோவில் முகப்பு மண்டப விவகாரம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன்  கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 25 March 2022 10:11 PM IST (Updated: 25 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் முகப்பு மண்டபம் விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆலோசனை நடத்தினார்.

காரைக்கால்
காரைக்கால் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் முகப்பு மண்டபம் விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆலோசனை நடத்தினார். 

கோவில் முகப்பு

காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்த, பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில், மாதா கோவில் வீதியில் உள்ளது. இந்த கோவில் வாசலில், அரசு அனுமதியின்றி ரூ.25 லட்சம் செலவில், முகப்பு மண்டபம் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரித்த ஐகோர்ட்டு அந்த முகப்பை வரும் 28-ந் தேதிக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தநிலையில் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர்  சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். 

போலீஸ் பாதுகாப்பு

அதேபோல், இந்து முன்னணியினர், கடை அடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் என தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் காங்கிரசார் கோவில் அருகே  கூடி, முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன், கட்சி நிர்வாகிகள் பசீர், கருணாநிதி, அரசன், சுப்பையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதனால் பொய்யாதமூர்த்தி கோவில் அருகே பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முகாமிட்டு வருவதால் அந்த இடம் வழக்கத்தைவிட பரபரப்புடன் காணப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் பொறுப்பேற்றுள்ள புதுச்சேரி கலெக்டர் வல்லவன் மற்றும் போலீஸ் ஐ.ஜி சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 
கூட்ட முடிவில், சர்ச்சைக்குரிய கோவில் முகப்பு மண்டபத்தை, கலெக்டர் மற்றும் ஐ.ஜி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முன்னதாக, கோவில் வாசலில் கட்டுமான பணிக்காக, சாலையின் நடுவே போடப்பட்டிருந்த இரும்பு சாரம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அகற்றப்பட்டது.

Next Story