5 வது நாளாக போராட்டம் சட்டசபை நோக்கி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


5 வது நாளாக போராட்டம் சட்டசபை நோக்கி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2022 10:36 PM IST (Updated: 25 March 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி
5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5-வது நாளாக போராட்டம்

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டக்குழுவினர் விடுப்பு எடுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு  5-வது நாளாக நீடித்தது.
அவர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் காரணமாக வரிவசூல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சியால் பராமரிக்கப்படும் பாரதி பூங்காவும் தொடர்ந்து மூடியே கிடக்கிறது. பாரதி பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தள்ளுமுள்ளு

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்  திடீரென சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தினார்கள். உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கிய ஊழியர்கள் சட்டசபை நோக்கி சென்றனர். சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே சென்றபோது அவர்களை தடுப்புகள் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவழியாக போராடி ஊழியர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

ரங்கசாமி விளக்கம்

பின்னர் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை முதல்-அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். முதல்-அமைச்சரை சந்திக்க காலதாமதம் ஆனால் அங்கிருந்த ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் 3 மணி அளவில் அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை அரசின் நிதிநிலையை எடுத்துக்கூறி தற்போதைய நிலையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கி சம்பளம் போடும் நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.
அடுத்த பட்ஜெட்டில் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் மீண்டும் போராட்டம் நடத்தும் இடத்துக்கு திரும்பினார்கள்.

Next Story