பா ஜ க தலைவர்களால் புதுவைக்கு எந்த பயனும் இல்லை நாராயணசாமி குற்றச்சாட்டு


பா ஜ க தலைவர்களால் புதுவைக்கு எந்த பயனும் இல்லை நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 March 2022 10:56 PM IST (Updated: 25 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைவர்களால் புதுவைக்கு எந்த பயனும் இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி
பா.ஜ.க. தலைவர்களால் புதுவைக்கு எந்த பயனும் இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
கடந்த சில நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு ரஷியா-உக்ரைன் போர் காரணம் என கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கடந்த 3 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 40 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

சூப்பர் முதல்-அமைச்சர்

இந்த பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருமானம் கிடைக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரிகள், தேசிய தலைவர்கள் வருகை தருகிறார்கள். புதுவைக்கு வருகை தரும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்களால் எந்த பலனும் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் கேவலமான ஆட்சி நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் யார் என்று தெரியவில்லை. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சூப்பர் முதல்-அமைச்சராக செயல்படுகிறார். சபாநாயகர், அமைச்சர்களும் முதல்-அமைச்சர்களாகவே செயல்படுகிறார்கள். 
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடைப்பட்ட திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. புதிதாக எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அமைதியான புதுவை மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மதவாத சக்திகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி துணை போகக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story