தமிழகத்தில் 10 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைவு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


தமிழகத்தில் 10 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைவு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x
தினத்தந்தி 26 March 2022 2:09 AM IST (Updated: 26 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 8 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளது என்றும், எனவே நமது செயல்பாட்டினை மத்திய அரசு பின்பற்றுகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை,

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை நேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் நினைவு நூலக கட்டிடம் தரைத்தளத்துடன் சேர்த்து 6 மாடி கட்டிடமாக, மொத்தம் 2 லட்சம் சதுரடியில் கட்டப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரியில்...

முதல் தளம், குழந்தைகள் நூலக பகுதியாகும். இங்கு 20 ஆயிரம் புத்தகங்கள், தினசரி நாளிதழ், வார, மாத பத்திரிகைகளை வாசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் மற்றும் ஆய்வகம் அமைக்கப்படும். மேலும் இந்த தளத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும். 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப்பகுதி அமைக்கப்படுகிறது. 4-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 5-வது தளத்தில் அரியவகை நூல்களும் வைக்கப்படும். 6-வது தளத்தில் பார்வையற்றோர் கற்று அறிவதற்காக டிஜிட்டல் மையம் அமைக்கப்படும்.

நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

விபத்துகள் குறைவு

கடந்த காலங்களில் தமிழகத்தில் மிக மோசமான அளவில் விபத்துகள் நடந்தன. ஆனால் முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்காக பல்வேறு ஆலோசனை வழங்கினார். அந்த அடிப்படையில் அதிக விபத்து நடக்கிற நாமக்கல், செங்கல்பட்டு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுத்தோம். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 15 சதவீத விபத்துகளை குறைத்து இருக்கிறார்கள். அது எப்படி என்பதனை தெரிந்து கொண்டு மத்திய அரசும் அதனை பின்பற்றும் என்று நற்சான்றிதழ் தந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடி சென்ற அமைச்சர்கள் 3 பேரும் அங்கு நடந்து வரும் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தனர்.

Next Story