4-வது நாளாக உயர்வு: பெட்ரோல் விலை ரூ.104-ஐ கடந்தது: டீசல் ரூ.94-ஐ தாண்டி விற்பனை
4-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104-ம், டீசல் ரூ.94-ம் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தான் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 4-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல் இருந்து, 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு உயர்ந்திருந்தது.
அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சிறிய அளவில் விலை மாற்றம் கண்டு, அதன்பின்னர் 66 நாட்கள் மாற்றம் இல்லாமல் இருந்து, கடந்த 22-ந்தேதி விலை அதிகரித்தது.
கடந்த 22-ந்தேதி விலை உயர்வுக்கு பிறகு, அதற்கு மறுநாளும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் அதன் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், 3-வது நாளாக நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் 103 ரூபாய் 67 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 93 ரூபாய் 71 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் 4-வது நாளாக இன்று மீண்டும் விலை உயர்ந்தது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் 104 ரூபாய் 43 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 94 ரூபாய் 47 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 22, 23 மற்றும் 25-ந்தேதிகளில் ஏற்பட்ட விலை உயர்வால், அந்த 3 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 03 காசும், டீசல் 3 ரூபாய் 04 காசும் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து விலை அதிகரித்தே காணப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விலை உயர்வின் தாக்கம் எந்தெந்த பொருட்களில் பிரதிபலிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
Related Tags :
Next Story