தூத்துக்குடி: தென்திருப்பேரை கோவிலின் தேரோட்டம் கோலாகலம்!
நவதிருப்பதி கோவில்களில் 7 வது திருப்பதியான தென்திருப்பேரை கோவிலின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி,
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி கோவில்களில் 7 வது திருப்பதியாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர் மகரநெடுங்குழைக்காதர்.
இந்த திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி உலா வருதலும், கடந்த 22 ஆம் தேதி 5 ஆம் திருநாளில் கருடசேவையும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 வது திருநாளான இன்று தேர் திருவிழா நடந்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு உற்சவர் நிகரில் முகில் வண்ணன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 9 மணிக்கு திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழ ரத வீதியில் புறப்பட்ட தேர் தெற்கு ரத வீதி வழியாக மேல ரத வீதியில் வந்த போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் தேர் நிறுத்தப்பட்டது.
பின்னர் மாலை 4 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வந்து 6 மணிக்கு தேர் நிலைவந்து சேரும். விழாவில் கோவில் தக்கார் அஜித், நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story