எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க. அமைப்பு செயலாளர் ஆலோசனை
வாரிய தலைவர் பதவி தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
வாரிய தலைவர் பதவி தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
கூட்டணி அரசு
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்பட 4 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
பா.ஜ.க. சார்பில் அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் உள்ளனர். செல்வம் சபாநாயகராக உள்ளார். இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
வாரிய தலைவர்
இதேபோல் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்படும் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோரும், பா.ஜ.க. முக்கிய பிரமுகர்களும் வாரிய தலைவர் பதவிகளை கேட்டு உள்ளனர். தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால் மாற்று முடிவு எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் நடக்கும் பணிகள் கூட தங்கள் தொகுதியில் நடக்கவில்லை என்று அரசு மீது குற்றஞ்சாட்டினர். அவர்களை பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் சமாதானப்படுத்தி வைத்திருந்தனர்.
அமைப்பு செயலாளர்
இந்தநிலையில் பா.ஜ.க. அமைப்பு செயலாளரான சந்தோஷ்ஜி இன்று புதுச்சேரி வந்தார். அவர் பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சரமாரி குற்றச்சாட்டுகள்
அப்போது கூட்டணி ஆட்சி அமைந்து 10 மாதங்கள் ஆகிய நிலையிலும் தங்களுக்கு உரிய கவுரவம் வழங்கப்படவில்லை என்று பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினார்கள். வாரிய தலைவர் பதவிகளை வழங்க கட்சி மேலிடம் அறிவுறுத்தியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் தங்கள் தொகுதி பணிகள் கூட முழுமையாக நடைபெறாத நிலை உள்ளதாக குறிப்பிட்டனர்.
அவர்களது குறைகளை கேட்டுக்கொண்ட சந்தோஷ்ஜி, இதுதொடர்பாக கட்சி மேலிடத்துடன் பேசி முடிவெடுப்பதாகவும் கூறினார். மாலையிலும் எம்.எல்.ஏ.க்கள் சந்தோஷ்ஜியிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் சந்தோஷ்ஜி ஆலோசனை நடத்தினார்.
மகளிர் அணி கூட்டம்
முன்னதாக அக்கார்டு ஓட்டலில் நடந்த தேசிய மகளிர் அணி கூட்டத்திலும் சந்தோஷ்ஜி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், புதுவை மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story