கோடை சீசன் துவக்கம்: 2 ஆண்டுகளுக்கு பின் களைகட்டியுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளம்
இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், பல மாதங்களாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், ஒகேனக்கல் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தளம் களைகட்டியுள்ளது.
Related Tags :
Next Story