'பாடை காவடி' திருவிழா: நேர்த்திக் கடன் செலுத்திய திரளான பக்தர்கள்...!


பாடை காவடி திருவிழா: நேர்த்திக் கடன் செலுத்திய திரளான பக்தர்கள்...!
x
தினத்தந்தி 27 March 2022 4:25 PM IST (Updated: 27 March 2022 4:25 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் சீதளா தேவி மகா மாரியம்மன்கோவில் உள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவில் பிரசித்திப்பெற்ற கோவில்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா பிரசித்திப்பெற்ற விழாக்களில் ஒன்றாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 11-ம் தேதி பூச்சுரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு குணமான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மூங்கில் மூலம் பாடை கட்டி அதில் சடலம் போல் படுத்துக்கொண்டனர். அவர்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உறவினர்கள் சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பல்வேறு மாவட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டியும், நோய் குணமாக வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் பாடை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story