பாலியல் தொழிலில் தள்ள முயன்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துகட்டிய சிறுமி..!


பாலியல் தொழிலில் தள்ள முயன்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துகட்டிய சிறுமி..!
x
தினத்தந்தி 27 March 2022 6:26 PM IST (Updated: 27 March 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தாயை தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தாய் திட்டியதால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை பிரிந்து சென்று தனது மற்ற 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சிறுமியின் தாய், சிறுமியை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி, தனது நண்பர்கள் முள்ளக்காட்டை சேர்ந்த தங்ககுமார் (வயது 28), கண்ணன்(22) ஆகியோரிடம் தெரிவித்து உள்ளார். பின்னர் தங்ககுமார், கண்ணன் மற்றும் அவரது நண்பர் கோடாங்கி (26) ஆகிய 3 பேரும் சிறுமியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அங்கிருந்த சிறுமியின் தாயை 4 பேரும் சேர்ந்து சேலையால் கழுத்தை இறுக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து உள்ளனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சிறுமி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அவரது தாய் முயற்சி செய்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தாயை கொலை செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி, நண்பர்கள் மூலம் தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story