செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப்பணிகள்: தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு


செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப்பணிகள்: தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 28 March 2022 4:36 AM IST (Updated: 28 March 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்போரூர் வட்டம் கோவளத்தில் அமைந்துள்ள புளூ பீச் பகுதியை முதலில் பார்வையிட்ட அவர், அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியதோடு, மரக்கன்றுகளை நடுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தண்டரை ஊராட்சியில் அமைந்துள்ள புல்லேரி மூலிகை பண்ணையையும் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு பூங்கா

பின்னர் திருக்கழுக்குன்றம் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை தலைமைச்செயலாளர் கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நகராட்சி ஜே.சி.கே. நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணியையும், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையையும் நேரில் பார்வையிட்டார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தையும், சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தையும் தலைமைச்செயலாளர் பார்வையிட்டார்.

தோட்டக்கலை பண்ணை

இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேலி ஊராட்சி, ஆத்தூர் அரசு தோட்டக்கலை பண்ணை, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி ஆகியவற்றையும் தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story