தொழிற்சங்கங்கள் போராட்டம்: மின்சார, மெட்ரோ ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து குறைந்ததை தொடர்ந்து சென்னை மின்சார, மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும்தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இன்று பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது.
பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள். மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும்.
ஆனால் இன்று பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதியது. தாம்பரம்-கடற்கரை, சென்ட்ரல்-அரக்கோணம் வழத்தடத்தில் பல ரெயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பலர் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்துதான் அவர்களால் டிக்கெட் வாங்க முடிந்தது.
சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் இன்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது.
மின்சார ரெயில்களைவிட மெட்ரோ ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் பலர் மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்பவில்லை. ஆனால் இன்று மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
மெட்ரோ ரெயிலில் வந்த பயணிகள் சிலரிடம் கேட்டபோது, மெட்ரோ ரெயில்களில் எவ்வித சிரமும் இல்லாமல் சரியான நேரத்துக்கு செல்ல முடிந்தது. கட்டணம் அதிகமாக இருப்பதால் தினமும் இப்படி சொகுசாக பயணிக்க இயலவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.
Related Tags :
Next Story