தேனி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் உணவின்றி தவித்த மாணவர்கள்


தேனி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் உணவின்றி தவித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 29 March 2022 6:54 PM IST (Updated: 29 March 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உணவின்றி தவித்தனர்.

தேனி:
தேனி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 306 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கண்காட்சி 7 தலைப்புகளில் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர். இந்த படைப்புகளை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். ஒவ்வொரு தலைப்புகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும். மேலும், அந்த படைப்புகளை சமர்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்கள் படித்து வரும் பள்ளிக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 
நேற்று நடந்த கண்காட்சிக்கு வகுப்பறைகளில் போதிய இடவசதி இல்லாததால் நடைபாதையில் மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை பார்வைக்காக வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் பொறுப்பு ஆசிரியர்கள் மூலமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் கண்காட்சி அரங்கில் இருந்து வெளியே சென்று இருந்ததால், அத்தகைய பள்ளி மாணவ, மாணவிகள் உணவு கிடைக்காமல் தவித்தனர். பின்னர், அவர்கள் உணவு ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிக்கு சென்று உணவு கேட்டனர். அப்போது உணவு பொட்டலங்கள் தீர்ந்து விட்டதாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர், மீண்டும் ஓட்டலில் உணவு வாங்கி வந்து மாணவர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள் கொடுத்தனர். அதுவரை மாணவ, மாணவிகள் பசியோடு தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) கண்காட்சி நடக்கிறது. 

Next Story