நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளில் விடுதலை சிறைத்துறை விதிகளில் திருத்தம்


நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளில் விடுதலை சிறைத்துறை விதிகளில் திருத்தம்
x
தினத்தந்தி 29 March 2022 9:00 PM IST (Updated: 29 March 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

புதுவை சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளில் விடுதலை செய்ய சிறைத்துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுவை சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளில் விடுதலை செய்ய சிறைத்துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

விதிகளில் திருத்தம்

புதுவை சிறைத்துறை விதிகள் 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதன்பின் விதிகள் எதுவும் திருத்தப்படாத நிலையில் இருந்தது. பல்வேறு மாநிலங்களில் விதிகளில் திருத்தங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.
அதேபோல் புதுவை சிறைத்துறை விதிகளிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்த விவரங்கள் அடங்கிய புத்தகத்தை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் வெளியிட, அதனை சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். அப்போது பதவி உயர்வு பெற்ற சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதற்கான பேட்ஜை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் அணிவித்தார்.

10 ஆண்டுகளில் விடுதலை

புதிய திருத்தத்தின்படி ஆயுள்தண்டனை கைதிகளை 10 ஆண்டு சிறைவாசம் முடிந்ததும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். இந்த விதிமுறையானது போக்சோ வழக்குகளில் சிறையில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.
மேலும் காவல்துறையில் இருப்பதுபோன்று சிறைத்துறை காவலர்கள், அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு, அலவன்சுகள் வழங்கவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு கைதிகளுக்கு காலையில் கோதுமை தோசை வழங்கப்பட்டது. இனி இட்லி, உப்புமா, பொங்கல் போன்றவையும் வழங்கப்பட இருக்கிறது.

வெளிமாநிலத்தில் தண்டனை

புதுவையில் குற்றங்கள் புரியும் வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகள் சிறை தண்டனையை இங்கேயே அனுபவிக்கவேண்டும். இதனால் அவர்களை பார்ப்பதில் அவர்களது உறவினர்களுக்கு சிரமங்கள் இருந்து வந்தது.
புதிய திருத்தத்தின்படி தண்டனை பெறும் வெளிமாநில கைதிகள் 6 மாத சிறை தண்டனையை புதுவையில் அனுபவித்துவிட்டால் அதன்பின் தங்கள் சொந்த மாநில சிறைகளில் தண்டனையை அனுபவிக்க திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டு பயிற்சி

புதுவை    சிறைவிதிகள் 1963-ம் ஆண்டுக்கு பின் தற்போது தான் திருத்தப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கு தற்போது பொம்மை செய்வது, இயற்கை விவசாயம் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு மனநல பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் இணைந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறையில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறையில் கைதிகள் பயன்படுத்தும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் சிறை பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story