பிறந்த குழந்தையை பார்க்க 2 மகன்களுடன் மொபட்டில் சென்ற கிரேன் ஆபரேட்டர் லாரி மோதி பலி


பிறந்த குழந்தையை பார்க்க  2 மகன்களுடன் மொபட்டில் சென்ற  கிரேன் ஆபரேட்டர்  லாரி மோதி பலி
x
தினத்தந்தி 29 March 2022 11:50 PM IST (Updated: 29 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

2 மகன்களுடன் மொபட்டில் சென்றபோது லாரி மோதி கிரேன் ஆபரேட்டர் இறந்தார். பிறந்த குழந்தையை பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பாகூர்
2 மகன்களுடன் மொபட்டில் சென்றபோது லாரி மோதி கிரேன் ஆபரேட்டர் இறந்தார். பிறந்த குழந்தையை பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கிரேன் ஆபரேட்டர்

பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு  நிதின்கிருஷ்ணன் (6), அதின்கிருஷ்ணன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 
காயத்ரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக விக்னேஸ்வரன் தனது மனைவி, மகன்களுடன் கன்னியக்கோவில் பாரதி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த காய்த்ரிக்கு புதுச்சேரி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் விக்னேஸ்வரன் தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக புதுச்சேரிக்கு மொபட்டில் சென்றார்.

உடல் நசுங்கி பலி

கிருமாம்பாக்கம் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாறு பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் விக்னேஸ்வரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவரது சாமர்த்தியத்தால் மகன்கள் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ரெட்டிச்சாவடி போலீசார், பலியான விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
3-வதாக பிறந்த குழந்தையை பார்க்க சென்றபோது லாரி மோதி கிரேன் ஆபரேட்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story