வேலூரில் பரபரப்பு: மணல் கொள்ளையனுடன் தனிப்படை போலீஸ் உரையாடல்?


வேலூரில் பரபரப்பு: மணல் கொள்ளையனுடன் தனிப்படை போலீஸ் உரையாடல்?
x
தினத்தந்தி 30 March 2022 12:17 PM IST (Updated: 30 March 2022 12:17 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் மணல் கொள்ளையனுடன் தனிப்படை போலீஸ்காரர் உரையாடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

வேலூர்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் செயல்படும் தனிப்படை போலீசார் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக புகாருக்கு உள்ளாகி வருகிறது. தனிப்படையில் செயல்படும் சிலர் சட்ட விரோத நடவடிக்கையில் நேரடி தொடர்பில் இருந்து வருவதாக வேலூர் மாநகர காவல் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி பேச்சு எழுந்துள்ளது.

மணல் கடத்தல்

சமீபத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருக்கும் தனிப்படை போலீஸ் ஏட்டு குறித்த தகவல் வெளியானது. தற்போது எஸ்.பி., தனிப்படையில் உள்ள போலீஸ்காரர் ஒருவர் மணல் கடத்தல் தொடர்பாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் உயர் முக்கிய பொறுப்பில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டுக்கு மணல் தேவை என்பதால் எஸ்.பி., தனிப்படையில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இதற்காக, கொலை வழக்கில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவர் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மணல் ஏற்றிச் செல்ல ஏற்பாடும் நடந்தது.

அப்போது, மணல் கடத்தல் வாகனத்தை பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து பஞ்சர் மணி, வாகன உரிமையாளர் டெல்லிபாபு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். அந்த வாகனத்தை விடுவிக்க பேரம் பேசியும் முடியாத நிலையில், பஞ்சர் மணி தனிப்படை போலீஸ்காரர் ஒருவரிடம் தொடர்ந்து பேசி வாகனத்தை விடுவிக்க வற்புறுத்தியுள்ளார்.

ஆடியோ உரையாடல்

அந்த உரையாடலில், பஞ்சர் மணி, ‘எஸ்ஐ சொல்லித்தான் மணலை ஓட்டினேன். அவர் சொன்னபடி வண்டியுடன் வந்திருந்தால் வண்டி சிக்கியிருக்காது. எப்படியாவது அந்த வண்டியை மீட்டுக் கொடுங்கள். என் மீது வழக்கு போட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை. வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளது. என்னுடைய நம்பரை பார்த்து எஸ்ஐ எடுத்து பேசுவதில்லை’’ என்று கூறுகிறார். 

இதையடுத்து பஞ்சர் மணியை சமாதானம் செய்யும் அந்த எஸ்.பி., தனிப்படை போலீஸ்காரர் ‘எங்கள் தரப்பில் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. பார்த்து அட்ஜெஸ்ட் செய்துகொள்’ என்று கூறுகிறார். மற்றொரு ஆடியோவில் வீடு கட்டிவரும் காவலர், பஞ்சர் மணியிடம் பேசும்போது, ‘‘நாளைக்கு 10 ஆயிரம் கொடுக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்ய முடியும்’’ என்கிறார்.

இந்த ஆடியோ உரையாடல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘‘டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Next Story