நெல் கொள்முதல்: விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது!
விவசாயிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல், விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு பணிபுரிந்த எழுத்தர் ராமச்சந்திரன் என்பவர் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் 200 மூட்டைக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
அதிர்ச்சி அடைந்த விவசாயி அழகுவேல் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை சிறுபாக்கம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது விவசாயி அழகுவேல் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் கிருஷ்ணசாமிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் கிருஷ்ணசாமி, எழுத்தர் ராமச்சந்திரனிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story