புதுவை சட்டசபையில் ரூ 3 613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்


புதுவை சட்டசபையில் ரூ 3 613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 30 March 2022 7:29 PM IST (Updated: 30 March 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி
புதுவை சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டம்

புதுவை சட்டசபையில் கடந்த காலங்களில் மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருகிறது. 
அதேபோல் இந்த ஆண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்தநிலையில் புதுவை சட்டசபை  கூடியது. சபை நடவடிக்கைகளை சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை பட்ஜெட் தாக்கல் செய்ய அழைத்தார்.

இடைக்கால பட்ஜெட்

அதனைத்தொடர்ந்து நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசின் 5 மாத செலவினத்துக்கு (ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை) ரூ.3 ஆயிரத்து 613 கோடியை ஒதுக்கீடு செய்யும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்விகளை எழுப்பினார்கள். அவர்கள் மின்துறை தனியார் மயம் எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டவற்றை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் எழுதிய  அட்டைகளையும் ஏந்தி நின்றனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசும்போது, மத்திய அரசு நிதி ஒதுக்கிய நிலையிலும் முழுமையான பட்ஜெட் போடாதது ஏன்? முழுமையான பட்ஜெட் போடுவதில் என்ன தயக்கம்? முதல்-அமைச்சரை பா.ஜ.க. டெல்லிக்கு அழைப்பதாகவும், அவர் செல்லாததால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பேசப்படுகிறது என்று கூறினார்.

ரங்கசாமிக்கு மிரட்டல்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் நாஜிம் பேசும்போது, மத்தியில் உங்களது கூட்டணி அரசுதான் உள்ளது. அப்படியிருக்க பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெறுவதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடர்ந்து பேசும்போது, கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு புதிதாக எந்த ஒரு தொழிற்சாலையும் வரவில்லை. பிரதமர் வந்தபோது பெஸ்ட் புதுச்சேரி என்றார். அதை நம்பி மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. டெல்லியிலிருந்து முதல்-அமைச்சர் மிரட்டப்படுவதாக பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். முதல்-அமைச்சர் யாருடைய கைப்பாவையாகவோ செயல்படக்கூடாது என்றார்.

வெளிநடப்பு

மேலும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றும் கூறிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியேறினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக.தியாகராஜன் ஆகியோரும் வெளியேறினார்கள். 
தி.மு.க. தெரிவித்த அதே கருத்தை தெரிவித்துவிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

நமச்சிவாயம் வரவில்லை

 கூட்டத்தின்போது அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.வான கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

Next Story