கள்ள நோட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக கைதான 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக கைதான 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
கள்ள நோட்டு
புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல் உருளையன்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கும்பலிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புதுவையில் புழக்கத்தில் விட்டது அம்பலமானது.
இதையடுத்து சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரதீப்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை கும்பல்
தொடர்ந்து மோகன்கமல், பிரதீப்குமார் ஆகிய 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை எண்ணூரை சேர்ந்த ரகு (30), ராயபுரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் (30), தமீன் அன்சாரி (28), பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த சரண்ராஜ் (30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று ரகு உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் வீட்டில் இருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படும் நவீன எந்திரங்கள், ஜெராக்ஸ் மிஷின், கட்டிங் மிஷின், பச்சைகோடு வரையும் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் அவர்கள் 4 பேரையும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சிறையில் உள்ள ரகு, நாகூர் மீரான், தமீன் அன்சாரி, சரண்ராஜ் ஆகிய 4 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, அவர்கள் 4 பேரையும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவடையும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும் என்று உருளையன்பேட்டை போலீசார் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த நிலையில் கள்ளநோட்டு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தரவு பிறப்பித்தார்.
எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நாளை (வியாழக்கிழமை) ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அவர்கள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று புதுவைக்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். புதுவையில் முகாமிட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கள்ள நோட்டு வழக்கு என்பதால் இந்த வழக்கு தேசிய புலானாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story