2024-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது - ஏ.ஐ.சி.டி.இ. தகவல்
2024-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்னை,
என்ஜினீயரிங் கல்வியின் தற்போதைய போக்கு, குறைவான மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆராய ஐதராபாத் ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு என்ஜினீயரிங் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் தற்போதுள்ள மோசமான மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போக்குகளை காரணம் காட்டி, 2024-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் அமைப்பதற்கான தடையை தொடர பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) 2024-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 25 சதவீதம் கூடுதல் திறனையும், 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 15 சதவீதம் கூடுதல் திறனையும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதித்து இருக்கிறது.
ஏ.ஐ.சி.டி.இ. தனது புதிய வழிகாட்டுதல்களில் மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களை வழங்கியிருக்கிறது. அதன்படி, முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை சான்றிதழையும், 2-ம் ஆண்டில் வெளியேறும் மாணவர்கள் இளநிலை டிப்ளமோ மற்றும் 3-ம் ஆண்டில் வெளியே செல்லும் மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி சான்றிதழையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story