சர்ச்சைக்குள்ளான புரட்சித் தலைவர் அடைமொழி - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்


சர்ச்சைக்குள்ளான புரட்சித் தலைவர் அடைமொழி - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
x

நாளிதழ் விளம்பரங்களில் புரட்சி தலைவர் என்ற அடைமொழி விடுபட்டு இருப்பது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின்கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பது தொடர்பான விளம்பரம் முக்கியமான நாளிதழில் இடம் பெற்றிருந்தன. இந்த விளம்பரத்தில் இந்த விழா நடைபெறும் இடம் “டாக்டர் எம்.ஜி. இராமசந்திரன் மத்திய ரெயில் நிலையம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த இடத்திற்கு “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் மத்திய ரெயில் நிலையம், சென்னை” என்றுதான் பெயர். “புரட்சி தலைவர்” என்ற சொற்கள் விளம்பரத்தில் வேண்டுமென்றே விடுபட்டு இருக்கிறது. இது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

மறைந்த தி.மு.க. தலைவர் பெயரை “கலைஞர்” என்ற அடைமொழியோடு குறிப்பிடுகின்ற நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு மூல காரணமானவரும், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி மாபெரும் மக்கள் புரட்சி செய்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குள்ள அடைமொழியான “புரட்சித் தலைவர்” என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயலாகும். இதனை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இனி வருங்காலங்களில் “புரட்சித் தலைவர்” என்ற அடைமொழி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story