சிவகாசி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை


சிவகாசி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 31 March 2022 1:57 PM IST (Updated: 31 March 2022 1:57 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே வாலிபரை மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்தீபன் (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிவகாசி அருகில் உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்று விட்டு தனது நண்பர் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசியில் உள்ள வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அரவிந்தன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கள்ளப்பட்டி என்ற பகுதியில் மறைந்து இருந்த கும்பல் ஒன்று திடீரென சாலையில் வந்து நின்று அரவிந்தனை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அரவிந்தனுக்கு உடலில் 20-க்கும் மேற்பட்ட வெட்டுக்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் வந்த துரைப்பாண்டிக்கு தலை மற்றும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் அரவிந்தன் கைகள் துண்டானதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் அரவிந்தன், துரைப்பாண்டி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் இன்றி அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். துரைப்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவிந்தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரவிந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிவகாசியில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நவநீதிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அரவிந்தன் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக அரவிந்தனை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story