ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்கிறது


ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்கிறது
x
தினத்தந்தி 31 March 2022 11:43 PM IST (Updated: 31 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
சிலிண்டருக்கு மாலை
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுவையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன்கோவில் தெருவில் உள்ள தனது வீ்டு முன் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தட்டு வண்டி ஒன்றில் மொபட்டை ஏற்றி அதன் அருகே கியாஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலைபோட்டு ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தனர்.
மேலும் அடுப்புக்கூட்டி அதில் மண்பானையை வைத்து விறகு எரித்து சமையல் செய்தனர். அப்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் தனுசு, ரவிதேவ், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பின் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வழக்கம் போல் மவுனம்
5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 127 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மக்கள் தலையில் சுமையை ஏற்றி வைக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை தூக்கி எறிய இந்த போராட்டம் நடக்கிறது.
பக்கத்து நாடுகள் போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி வழக்கம்போல் வாய்திறக்காமல் மவுனமாக உள்ளார். பதவி பறிபோய்விடுமோ என்று அவர் பயப்படுகிறார்.
சுற்றுப்பயணம் முக்கியமா?
புதுவையில்  எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. சட்டசபை கூட்டம் நடக்கும்போது பா.ஜ.க.வை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுற்றுப்பயணத்தில் உள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்ளும் இல்லை. சட்டசபை முக்கியமா? சுற்றுப்பயணம் முக்கியமா?
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார். நமது மாநில உள்துறை அமைச்சர் எவ்வளவு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார்? என்பதை விளக்கவேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பல மாநிலங்களில் பதவி, அதிகார பலத்தை கொண்டு ஆட்சியை பிடிக்கிறார்கள். அது வெகுநாட்கள் நீடிக்காது.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தி.மு.க., காங்கிரஸ் ஆதரவு?
அவரிடம், புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்தால் தி.மு.க., காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்த முடிவாக இருந்தாலும் அதை இருகட்சி தலைமைகளும்தான் எடுக்கும். நாங்கள் புதுவை அரசியல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
கொசக்கடை வீதியில் காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ்      முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல் சுரேஷ், மாநில செயலாளர் சூசைராஜ், மனித உரிமை பிரிவு ஸ்ரீதர்பாபு, வக்கீல் பிரதீஷ் இருதயராஜ், வட்டார காங்கிரஸ் ஜெரால்டு, மேற்கு மாவட்ட தலைவர் ஜோசப், சிறப்பு அழைப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
லாஸ்பேட்டை
லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் உழவர்சந்தை அருகில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி அய்யப்பன், கட்சியின் செயலாளர் நந்தா கலைவாணன், வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
காரைக்கால்
காரைக்காலில் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் வடக்கு மகிளா காங்கிரஸ் தலைவி பூங்கொடி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடுகளின் முன் அடுப்பு ஊதியும், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடைத்தெருவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் துளசிங்கப்பெருமாள், ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுச்செயலாளர் தனுசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் அமிர்தராஜ், சிவப்பிரகாசம், மணிமாறன், கோதண்டபாணி, அய்யனார், ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story