எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 12:33 AM IST (Updated: 1 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம், 
3 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த விசுவலிங்கம் (வயது 50) தனது விசைப்படகில் சக்திவேல் (38), கலைமாறன் (29) ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் நேற்று இரவு 23 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும்,  விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை மீட்க கோரிக்கை
கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரையும் இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story