கட்டணம் செலுத்தாததால் அவமதிப்பு... கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்ததால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் சந்தேக மரணம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதற்குள் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் கல்லூரி வளாகத்தில் புகுந்து அங்கு நின்ற பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையிலான போலீசார், ஆஸ்பத்திரி முன்பு வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது நண்பரை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பேராசிரியர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதில் மயங்கி விழுந்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
சாலையின் நடுவே பந்தல் அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story