சிறுமிக்கு 9 வயது முதல் பாலியல் கொடுமை; நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து ரசித்த தாய்மாமன்
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண் தாய்மாமன் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை- சாந்தி தம்பதியின் ஒரே மகள். பிறந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை இறக்கவே குழந்தையை தனது தம்பி தேசப்பனிடம் சாந்தி ஒப்படைத்து விட்டு மறுமணம் செய்து கொள்கிறார்.
தாய் மாமன் தேசப்பன்- ரேவதி தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அதனால் பாசத்துடன் குழந்தையை வளர்த்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. குழந்தை, சிறுமியாக வளர்ச்சி அடைந்தாள். 9 வயதாகும் போது அவள் தாய் மாமனின் பாலியல் சீண்டலுக்கு ஆளானாள்.
அன்பு, பாசம் காட்டி வளர்க்க வேண்டிய சிறுமி சித்ரவதைக்கு ஆளானார். அத்தையும் சிறுமியை விடவில்லை. பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்ததால் அவள் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினாள்.
அனாதையாக வீதியில் நின்ற சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படிப்பை தொடர்ந்தாள். அங்கு அவளுக்கு பாதுகாப்பாக இருந்ததால் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்தாள்.
சிறுமி இல்லத்தில் தங்கி இருப்பதை அறிந்து தேசப்பனும் அவரது மனைவியும் வீட்டிற்கு அழைக்க காப்பகத்திற்கு சென்றுள்ளனர். காப்பக நிர்வாகிகளிடம் பாசமழை பொழிந்து மகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
தாய் மாமன் வீட்டிற்கு வந்த சிறுமி 10-ம் வகுப்பு படிப்பை தொடராமல் போனது மட்டுமின்றி மீண்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். ஒவ்வொரு நாள் இரவும் தாய்மாமனின் சீண்டல்களால் மனவேதனை அடைந்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் முடிவு செய்தார் தாய்மாமன். இதற்கு தேசப்பன் மனைவி ரேவதியும் உடந்தையாக இருந்தார். தாய் மாமனின் காம பசிக்கு ஆளான சிறுமி கர்ப்பமும் அடைந்தார். ஆனால் குழந்தை வளர்ச்சி இல்லாத காரணத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு இரவும் சிறுமிக்கு வேதனையாக கழிந்ததால் மீண்டும் வீட்டை விட்டு ஓடினாள். பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் அவளை சிலர் ஒப்படைத்தனர். தாய் மாமன் - அத்தையின் கொடுமைக்கு பயந்து சென்ற சிறுமி காப்பகம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினாள்.
ஆனால் அவளுடைய விதி அங்கும் விளையாடியது. காப்பகத்தில் உள்ள 2 பொறுப்பாளர்கள் அவளை பலாத்காரம் செய்தனர். அவர்களது காம பசிக்கு இறையான சிறுமியின் வாழ்க்கை கூண்டுக்குள் சிக்கிய கிளியாக மாறியது. காப்பக பொறுப்பாளர்களின் பாலியல் தொல்லையால் செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக இளம்பெண் நீதிபதி முன்பு நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவரின் உடலில் காயம்இருந்ததை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். அதன் பிறகு நீதிபதியிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர் மல்க அவள் கூறியுள்ளார். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளாள்.
என் வாழ்க்கையை தாய் மாமன் மட்டுமின்றி அவரது நண்பர்களும் சீரழித்து விட்டனர். அவர்கள் என்னுடன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் மாமன் செல்போனில் பதிவு செய்வார். நண்பர்களுடன் என் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று இளம்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி காசிமேட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மையத்தின் நிர்வாகி லதா, ராயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர் புகாரின் பேரில் போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, ஆகியோர் இளம்பெண்ணின் தாய் சாந்தி மற்றும் அத்தை ரேவதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணை சீரழித்த தாய் மாமன் தேசப்பன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட பலரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story