சிவகங்கை: சொத்து தகராறில் சித்தப்பா-சித்தியை அரிவாளால் வெட்டியவர் கைது - போலீசார் விசாரணை
சிவகங்கை அருகே சொத்து தகராறில் சித்தப்பா, சித்தியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சாத்தினிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் ராமச்சந்திரன் மற்றும் மாணிக்கம். இவர்களில் ராமச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இறந்த ராமச்சந்திரன் மகன் மணி மற்றும் அவரது சித்தப்பாவான மாணிக்கத்திற்கு இடையே கடந்த சில வருடங்களாக சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
தங்களுக்கு முறையாக சொத்து பிரிக்கப்படவில்லை என மணி அவ்வப்போது மாணிக்கத்திடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சொத்து சம்பந்தமாக கோபத்தில் இருந்த மணி, அரிவாளுடன் சித்தப்பா மாணிக்கம் வீட்டிற்கு சென்று தனக்கு 20 சென்ட் இடம் வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
அப்போது, சொத்து ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்டது என மாணிக்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி தான் கொண்டுவந்த அரிவாளால் தனது சித்தப்பா மாணிக்கம் (60) ,சித்தி பஞ்சு (50), சகோதரி ஜெயா, ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் மாணிக்கத்தின் கை மணிக்கட்டு பின்கழுத்துப் பகுதியில் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் பஞ்சு ,ஜெயா ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில் மாணிக்கத்தின் உடல் நிலை மோசமாக உள்ளதாக மருதுவர்கள் கூறினர்.
சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் வெட்டிய வழக்கில் மணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story