பெங்களூருவில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் கார் டிரைவர் கைது வியாபாரிக்கு வலைவீச்சு
பெங்களூருவில் இருந்து புதுவைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி
பெங்களூருவில் இருந்து புதுவைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடோனில் சோதனை
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. சாலையில் உள்ள கடைகளுக்கு விற்க தனியார் குடோன் ஒன்றில் போதை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நள்ளிரவில் ராம்நகர் முதலாவது குறுக்கு தெருவில் வந்து நின்ற காரை சந்தேகத்தின்பேரில் மடக்கினர். காரில் இருந்தவரை சுற்றி வளைத்த போலீசார் அங்குள்ள குடோனை சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக போதை பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் திடீரென்று அங்கிருந்து 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்திச்சென்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
380 கிலோ போதை பொருட்கள்
பிடிபட்ட நபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக போதை பொருட்களை கடத்திக் கொண்டு வந்து பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
குடோனில் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 380 கிலோ போதை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரூ.19 ஆயிரத்து 500 ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரித்ததில், பிடிபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுக்குப்பம் செங்குந்தர் தெருவை சேர்ந்த கார் டிரைவர் தீனத்குமார் (வயது25) என்பது தெரியவந்தது. புதுவை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த வியாபாரியான ராஜூ என்கிற அன்பு என்பவருக்கு பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை காரில் கடத்தி வந்ததாக போலீசில் அவர் ஒப்புக் கொண்டார்.
வியாபாரிகள் பட்டியல்
இதையடுத்து தீனத்குமார் கைது செய்யப்பட்டார். கடைக்காரர் ராஜூவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அத்துடன் அவரிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகளின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
போதை பொருட்கள் பறிமுதல் நடவடிக்கையில் விரைந்து செயல்பட்ட போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் பாராட்டினார்.
Related Tags :
Next Story