மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை தவிர அந்த பணியில் யார் தலையிட்டாலும் நடவடிக்கை மேயர் எச்சரிக்கை


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை தவிர அந்த பணியில் யார் தலையிட்டாலும் நடவடிக்கை மேயர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 April 2022 3:32 AM IST (Updated: 2 April 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை தவிர்த்து அந்த பணியில் யார் தலையிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் டி.ரத்னா, உலக வங்கியின் முன்னோடி போக்குவரத்து வல்லுநர் ஜெரால்டு ஆலிவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மேயர் ஆர்.பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.5.4 கோடி நிதி

சென்னை மாநகராட்சியில் நடமாடும் கழிப்பறைகள் இருந்துள்ளது. தற்போது இந்த கழிப்பறைகளை பராமரிக்க ரூ.5.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர்களின் பணிகள் என்ன என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தெரியும். யாருக்காக பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள்தான் பணியை செய்ய வேண்டும். வேறு யாரேனும் அந்த பணியில் தலையிட்டால், அதுகுறித்து தலைமை அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் சாலைகளில் பயணிக்க முதல்கட்டமாக தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பில் தெருவிளக்கு அமைக்கவும், பொது இடங்களில் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கழிவறைகள் ஏற்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள இலவச பொது கழிப்பறைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story