புதுச்சேரி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் மு க ஸ்டாலினிடம் தி மு க எம் எல் ஏ க்கள் வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலத்தின் உரிமைக்காக தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தின் உரிமைக்காக தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன், துணை அமைப்பாளர் சண்.குமாரவேல், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்காக டெல்லி சென்று உள்ளனர். அவர்கள் அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. மாநில அந்தஸ்து இல்லாததால் மத்திய அரசின் நிதிக்குழுவில் சேர்க்கப்படாமல் உள்ளது. சட்டமன்றம் இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கு கொடுப்படுவதுபோல் வரிச்சலுகையும் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரிக்கான கடன் தற்போது ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது.
மானியங்கள் நிறுத்திவைப்பு
குரூப் பி பிரிவில் வரும் டாக்டர்கள், பேராசிரியர்கள் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவதால் புதுச்சேரி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் சில மாதங்கள் பணிபுரிந்துவிட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால் மருத்துவ கலலூரி பேராசிரியர் பணியிடங்கள் தொடர்ச்சியாக காலியாக உள்ளது. எனவே குரூப் பி பணியிடங்களை நிரப்ப தனி தேர்வாணையம் அமைக்கும் உரிமை புதுச்சேரிக்கு வழங்கப்பட வேண்டும்.
புதுவைக்கு வழங்கப்படும் மானியங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் மட்டுமே நிதியை உயர்த்தி அனுமதிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தினால் தொடர்ச்சியாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாடு ஏற்படவும், புதுவை மக்கள் நலன் பாதுகாக்கப்படவும் மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்பட வேண்டும்.
குரல் கொடுக்கவேண்டும்
பொதுத்துறை நிறுவனங்களையும், பஞ்சாலைகளையும் புனரமைக்கும்பொருட்டு ஒன்றிய அரசு கூடுதல் நிதியினை வழங்கிட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுடன் தேர்தலை நடத்தி பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தில் இருந்து நிதியுதவி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவைகளுக்காக தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story