நார்த்தாமலை ஜல்லிக்கட்டில் 900 காளைகள் சீறிப்பாய்ந்தன 40 பேர் காயம்


நார்த்தாமலை  ஜல்லிக்கட்டில் 900 காளைகள் சீறிப்பாய்ந்தன 40 பேர் காயம்
x
தினத்தந்தி 2 April 2022 10:49 PM IST (Updated: 2 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

நார்த்தாமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 900 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்:
நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 900 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
மிரட்டிய காளைகள்
தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் என பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர்.  வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றன.
40 பேர் காயம்
காளைகள் முட்டி தள்ளியதில் சரவணக்குமார் (வயது 20), ரகு (20), பார்த்திபன் (24), பாண்டியன் (34), கண்ணன் (32), ரவி (21), மனிஸ் (23), கண்ணன் (21), ரெங்கசாமி (65) உள்பட மொத்தம் 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அதில்  படுகாயமடைந்த ரவிக்குமார் (23), கார்த்தி (24) உள்பட 13 பேர் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், ரொக்க பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானவர்கள் வந்து கண்டு களித்தனர். 
பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story